சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் கொடுமை அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரியமாக நடைபெற்று வந்த தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகளை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரு கட்சிகளும் முற்றிலுமாக கைவிட்டுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் கடுமையான வெயில் மற்றும் அக்னி நட்சத்திர காலத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் சாலை ஓரங்களிலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படும். தர்பூசணி, இளநீர், வெள்ளரி, லெமன் ஜூஸ், பானகம் உள்ளிட்டவை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள் இந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த இரு திராவிடக் கட்சிகளும் தண்ணீர் பந்தல் திறப்புக்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை. குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதே நாள் அக்னி நட்சத்திரம் தொடங்கியும் கூட இரு கட்சிகளும் இதில் அக்கறை செலுத்தவில்லை.
இதையும் படிங்க: இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

இது தொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “தேர்தலில் பெரும் தொகையை செலவழித்தும் தோல்வியை சந்தித்த இரு கட்சிகளும், மக்கள் மீது கோபத்தில் உள்ளன. பெரிய அளவில் செலவு செய்யாமல் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) ஆட்சியைப் பிடித்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டுமே தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருப்பதால், தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் பாரம்பரியத்தை முழுமையாக கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், புதிய ஆளும் கட்சியான த.வெ.க., சார்பில் சில இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி, தோல்வியின் வலியில் இருந்து மீள முடியாத நிலையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!