தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் நேற்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 75 வயதான கு.ப.கிருஷ்ணன் திருச்சி மாவட்டம் குழுமணியைச் சேர்ந்த முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது முதல் முறையாக அதிமுகவில் இணைந்த கிருஷ்ணன், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சி ஜானகி, ஜெயலலிதா தலைமையில் இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா பக்கம் சென்றார்.
1991-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேளாண்மைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2001-ல் தமிழர் பூமி கட்சியைத் தொடங்கினாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவில் இணைந்த அவருக்கு ஜெயலலிதா 2011-ல் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் கூடாரம் டோட்டலா காலி!! கு.ப.கிருஷ்ணனை தட்டித் தூக்கிய செங்கோட்டையன்! தவெகவில் ஐக்கியம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சிதறுண்டபோது ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓபிஎஸ்ஸிடமிருந்து விலகியிருந்த நிலையில், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கு.ப.கிருஷ்ணன், "அதிமுகவை ஒருங்கிணைக்க எவ்வளவோ முயன்றும் அது நடைபெறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்தளவுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது.
தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என எங்கள் தலைவர்களை உயர்த்திப் பிடித்து பேசுகிறார். எங்கள் தலைவர்களை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நாங்கள் கொண்டாடுவோம்" என்று தெரிவித்தார்.
இந்த இணைப்பு தவெகவுக்கு மூத்த அரசியல் அனுபவம் கொண்ட தலைவரின் வருகையாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி வரும் நிலையில், கு.ப.கிருஷ்ணனின் இணைப்பு தவெகவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மேலும் சிலர் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் ஜீரோ!! தனியா நின்னா மதிப்பில்லை! அரசியல் அனுபவம் பத்தாது!! விளாசும் தமிழிசை!!