ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் உடல்நலக் குறைவு காரணமாக விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசு மற்றும் நிர்வாகப் பணிகளை முதலில் நிறைவு செய்த பிறகே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு தோள்களிலும் ஏற்பட்ட வலி மற்றும் அசௌகரியத்தால் பவன் கல்யாண் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது மனைவி அண்ணா கொனிடேலாவுடன் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்று சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
மருத்துவர்கள் இரு தோள்களையும் விரிவாக பரிசோதித்ததில், தோள்பட்டையை சீராக இயங்கச் செய்யும் ரோட்டேட்டர் கஃப் தசைநார் மற்றும் தோள்பட்டை தசைகளில் கடுமையான பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த காயம் காரணமாக அறுவை சிகிச்சை அவசியம் என்றும், தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எல்லையை விரிவு செய்த பவன் கல்யாண்! தெலுங்கானா அரசியலில் ஜனசேனா என்ட்ரி!!

ஆனால், மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அலுவல் நிகழ்ச்சிகள் இருப்பதால், அவற்றை பாதியில் நிறுத்த விரும்பவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும் முடித்த பிறகே அறுவை சிகிச்சைக்கு உட்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
துணை முதல்வராக அரசுப் பணிகளிலும், ஜனசேனா கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், உடல்நலப் பிரச்சினையையும் மீறி தனது பொறுப்புகளை நிறைவேற்ற விரும்பும் அவரது முடிவு ஆதரவாளர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரது அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் தற்காலிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாண் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!