சென்னை: பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் விஜய் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் இணைந்து மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் தொடங்கி வைத்து, ஒரே ரயிலில் பயணம் செய்தனர். இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்துக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்ததுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், இருவரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்கப் புறப்பட்டுச் சென்றனர். பிரதமரின் வருகையையொட்டி, வழிநெடுகிலும் அவரைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து மோடி உற்சாகமாகக் கையசைத்து வரவேற்பைப் பெற்றார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒன்றான பூந்தமல்லி–போரூர்–வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்தனர். சுமார் ரூ.4,900 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, இருவரும் மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு! மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

அப்போது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் முன்னேற்றம், கட்டமைப்பு வசதிகள் மற்றும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இரு தலைவர்களும் ஒரே ரயிலில் பயணம் செய்தது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.
மெட்ரோ தொடக்க விழா முடிந்ததும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் காரில் சென்னை ஐஐடி வளாகத்துக்குச் சென்றனர். அங்கு இருவருக்கும் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ள இசை ஆராய்ச்சி மையம் மற்றும் மூளை ஆராய்ச்சி மையம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், தமிழகத்தில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மெட்ரோ பயணம், கோயில் தரிசனம், ஆராய்ச்சி மைய நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் பிரதமரின் சென்னைப் பயணம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!