பாட்டாளி மக்கள் கட்சி வரும் 17ஆம் தேதி சென்னையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நீதி அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்காக அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை நேரில் சென்று வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்துக்கு பாமகவின் மூத்த வழக்கறிஞர் பாலு சென்றார். அங்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
போராட்டத்தில் தவெக பங்கேற்கும் என்று கட்சி நிர்வாகிகள் உறுதி அளித்ததாக பாலு தெரிவித்தார். “தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டிலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தி வருகிறது. எனவே இந்த மிக முக்கியமான போராட்டத்தில் தவெகவும் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: விஜயால் அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்!! கட்சி மாற பெரும் படையே தயார்!! பழனிசாமி பக் பக்!
பாமக தரப்பில் இருந்து திமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “திமுக ‘செய்ய முடியாது’ என்று உறுதியாக இருக்கிறது. தூங்குகிறவரை எழுப்பலாம்; தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. அதனால் திமுகவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை” என்று பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, பீகார், கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இது நடைபெறவில்லை என்று பாமக குற்றம் சாட்டுகிறது.
“தந்தை பெரியார் ‘தலையை எண்ணுங்கள், இட ஒதுக்கீடு கொடுங்கள்’ என்று சொன்னார். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்புதான் அடிப்படை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ‘எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்கிறார். இது முழுப் பொய். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்” என்று பாமக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர்.
தவெகவும் சாதிவாரி கணக்கெடுப்பை தனது முக்கிய கொள்கையாக முன்வைத்துள்ள நிலையில், 17ஆம் தேதி போராட்டத்தில் விஜய் பங்கேற்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாரதியாருக்கு பாரத ரத்னா வேண்டும்!! ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உருக்கம்!