சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உள்ளக பிளவு மற்றும் கூட்டணி அதிரடிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அணி ஜனவரி 7-ஆம் தேதி அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தது. இதனால் பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸுக்கு மாற்று கூட்டணி தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு திமுக தலைமையிலான கூட்டணி ஒரே ஆப்ஷனாக தெரிகிறது.
ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 2012 தருமபுரி சாதி கலவரத்திற்குப் பிறகு பாமக-விசிக இடையே உறவு முற்றிலும் முறிந்தது.
பாமக தலித்துகளுக்கு எதிரான வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக திருமாவளவன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். "பாமக இடம்பெறும் எந்த கூட்டணியிலும் விசிக இடம்பெறாது" என்று அவர் வெளிப்படையாக கூறி வருகிறார்.
இதையும் படிங்க: பாமக ராமதாஸா? வேண்டாமே? 2011 போல ஆகிட போகுது! தயக்கம் காட்டும் ஸ்டாலின்! கைவிரித்த திமுக!
இந்த நிலைப்பாட்டை மாற்ற ராமதாஸ் தரப்பு திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே பாமக எம்எல்ஏ அருள் நேற்று (ஜனவரி 21) "திருமாவளவன் ராமதாஸின் வளர்ப்பு மகன்" என்று பேசியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது விசிக தலைமையை மென்மையாக்கும் நோக்கில் திட்டமிட்டு வெளியிடப்பட்ட கருத்தாக பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால் வன்னியர் வாக்கு வங்கி பெருமளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் தரப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என கணிக்கப்படும் நிலையில், தங்களுக்கும் அதே அளவு தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருப்பதால் தொகுதி பங்கீடு சிக்கலாக உள்ளது. ராமதாஸ் வந்தால் மற்ற கட்சிகளும் அதிக தொகுதி கோரலாம் என்பதால் திமுக தலைமை தற்போது ஓரங்கட்டி வைத்துள்ளது.
இதை உணர்ந்த ராமதாஸ் தரப்பு, "அதிக தொகுதிகள் தேவையில்லை, குறைந்த அளவே போதும்; விசிகவுடன் ஏற்படும் பிரச்னைகளை நாங்களே பேசி சரி செய்து கொள்கிறோம்" என்று திமுகவிடம் தெரிவித்துள்ளது. 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக-விசிக இரண்டும் இணைந்து போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது.
தற்போது பாமக உடைவு, ராமதாஸ்-திருமா சமரச முயற்சி ஆகியவை தமிழக அரசியலில் புதிய கணக்குகளை உருவாக்கியுள்ளன. ராமதாஸுக்கு திமுக மட்டுமே உண்மையான வாய்ப்பு என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: "Not Reachable"-ல் விஜய்!! கைமாறும் பவர் செண்டர்!! தவிக்கும் தவெக தொண்டர்கள்!!