2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கையால் ஏற்பட்ட மோதல், இரு கட்சிகளுக்கும் இடையே முன்பு இல்லாத அளவு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளதால், ராகுல் காந்தி தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசி கூட்டணி வாய்ப்பை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறை காங்கிரஸ் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், வெற்றி பெற்றால் அமைச்சரவையில் பங்கையும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்களே முடிவு செய்வார்கள்! ஸ்டாலினுக்கு காங்., எம்.பி பதிலடி!
இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், "கூட்டணி உறுதியாக உள்ளது, ஆனால் ஆட்சி பங்கு கிடையாது" என தெளிவுபடுத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "முதல்வரின் கருத்து அவரது கட்சியின் கருத்து" என்று கூறி சமாளிக்க முயன்றாலும், காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர்.

பீகார், மகாராஷ்டிரா தேர்தல்களில் கடைசி நேர முடிவால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவை பிப்ரவரி 22க்கு பிறகே அமைக்க தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி TVK தலைவர் விஜய்யுடன் ஏற்கனவே உரையாடியதாகவும், மீண்டும் போன் செய்து கூட்டணி பேச வாய்ப்புள்ளதாகவும் கசிந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. TVK ஏற்கனவே காங்கிரஸை 'இயற்கையான கூட்டாளி' என வர்ணித்துள்ளது. விஜய்யின் இளைஞர், பெண் வாக்கு வங்கியுடன் காங்கிரஸ் இணைந்தால், திராவிட கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என ராகுல் கருதுவதாக கூறப்படுகிறது.
தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு தரப்பும் கூறினாலும், கள நிலவரம் வேறு. பிப்ரவரி இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், காங்கிரஸ் நீண்டகால தோழமையை முறித்து விஜய்யுடன் மூன்றாவது அணி உருவாக்கலாம். அது தமிழக அரசியலில் வரலாற்று திருப்புமுனையாக அமையும். ஸ்டாலின் 'பிரதர்' ராகுல் அத்தகைய முடிவு எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!