தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அவர்கள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் ஜி.கே. மணி மற்றும் ராமதாஸ் - அன்புமணி இணைப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தீவிரமாக முன்வைத்தார்.
இணைப்புச் சாத்தியம்: தற்போதைய சூழலில், தந்தை-மகன் (ராமதாஸ் - அன்புமணி) இணைவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். இருவரும் ஒன்றிணையக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் ஜி.கே. மணிதான் என்று பாலு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ராமதாஸைத் தூண்டிவிடுவது ஜி.கே. மணிதான் என்றும், அவர் டெல்லி காவல்துறையில் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகள் வைத்து, ராமதாஸ் கையெழுத்திட்ட ஒரு புகாரைக் கொடுத்துள்ளார் என்றும், இது ஒன்றிணைவுக்கு எதிரான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜி.கே. மணி, இன்று அளித்த பேட்டியில் உள்ள தேவையும் நோக்கமும் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், 25 வருடங்கள் தலைவராக இருந்த ஜி.கே. மணி, கட்சி விதி குறித்து விவாதிக்கத் தயாரா என்றும் சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: பாமக ராமதாஸுக்கு மட்டுமே.. அன்புமணிக்கு கட்சியில் உரிமையில்லை - ஜி.கே. மணி அதிரடி
கட்சி விதிப்படி, 2022-2025 படி அன்புமணி தலைவராக இருந்த காலத்தில், இடைப்பட்ட ஏப்ரல் மாதம் அவரை நீக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்றும், மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் ஜி.கே. மணி பலமுறை கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார்.
"எல்லா நிலைகளிலும் தோற்றுவிட்டோம்... வெறுப்பில் இருப்பதால் இது போன்று செய்கிறார்கள்" என்றும், ஜி.கே. மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் "விரக்தி விளிம்பில் எல்லாம் இழந்து, திக்கற்ற நிலையில் புலம்புகிறார்கள்" என்றும் பாலு கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் 17ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் கலந்து கொள்வார்கள் என்றும், வெளியூரில் இருந்து வரும் பாமகவினரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைவர், தேர்தல் ஆணையம் உரிய அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. என்றும், "ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி 2026-இல் ஆட்சி அதிகாரத்தைக் பிடிக்கக் கூடிய கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும். இதை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம்" என்றும் அவர் உறுதியளித்தார்.
ஒட்டுக் கேட்பதாகப் புகார், டெல்லியில் புகார், விண்ணப்ப மனு என்ற பெயரில் மோசடி போன்ற அடிப்படை முகாந்திரம் இல்லாத புகார்கள் மூலம் குழப்பத்தில் நாடகம் நடத்துகிறார்கள் என்றும் பாலு அவற்றை நிராகரித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் Vs அன்புமணி: யாருக்கு பாமக? வழக்கை முடித்து வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!