தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: “பாஜக கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்காவிட்டால், 51 தொகுதிகளில் எங்கள் கட்சியின் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம்.”
இந்த அறிவிப்பு பாஜக-அதிமுக கூட்டணியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை தனது கட்சியின் அடையாளமாக கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நா.த.க. நிர்வாகிகள் கூறுகையில், “2024 லோக்சபா தேர்தலில் கரும்பு சின்னத்தை இழந்த பிறகு ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டு மாநில கட்சி அங்கீகாரம் பெற்றோம்.
இதையும் படிங்க: தொகுதி வாரியாக முதல்வர் மருமகன் அட்ராசிட்டி! திமுகவில் சலசலப்பு!! சபரீசன் பஞ்சாயத்தால் நிர்வாகிகள் கலக்கம்!
தற்போது ‘ஏர் கலப்பையோடு விவசாயி’ சின்னத்தில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். அத்வாலே கட்சி தமிழகத்தில் போட்டியிடாது என்று நம்பினோம். திடீரென 51 தொகுதிகளில் கரும்பு சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இது எங்கள் வாக்காளர்களை குழப்பும். நடிகர் விஜய்யின் த.வெ.க.வால் ஏற்கனவே பாதிப்பு ஏற்படும் சூழலில், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். சீமான் தனது டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி அத்வாலேவை தடுக்க முயல்வார்” என்றனர்.
திமுக வட்டாரங்களில் இந்த அறிவிப்பு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: “அத்வாலேவுக்கு ஒரு தொகுதி கூட தர மாட்டார்கள். அது அவருக்கும் தெரியும். தலித் ஓட்டுகள் அதிகம் உள்ள 51 தொகுதிகளில் போட்டியிட்டால், ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள் பிரிந்தாலும் திமுகவுக்கு சாதகமாக அமையும்.
விஜய் தலித் ஓட்டுகளை குறி வைத்து அரசியல் செய்கிறார். அத்வாலேவின் இந்த நகர்வு பின்னணியில் பாஜக இருக்கலாம். திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை பிரிக்க இது ஒரு தந்திரமாக இருக்கலாம்” என்றனர்.
தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை அத்வாலே கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. சீமான் இதை எப்படி சமாளிப்பார், பாஜக கூட்டணி இதை எப்படி கையாளும் என்பது தற்போது பரபரப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு!! நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! தொண்டர்கள் உற்சாகம்!