கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் தொகுதி வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை கேள்வியாக எழுப்ப வந்த ஒரு நபரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தள்ளிவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டு விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது பதிவில் கூறியிருப்பதாவது: "தனது தொகுதி எம்பியிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. ஜனநாயக முறையில் கேள்வி கேட்டால் ஏன் மிரட்டல் விடுக்கிறீர்கள்? இந்தக் கேள்வி கரூர் எம்பி ஜோதிமணிக்கு மட்டும் பொருந்துவது அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக தூக்கத்தில் இருக்கும் இண்டி கூட்டணியைச் சேர்ந்த அனைத்து எம்பிகளுக்கும் இது பொருந்தும்.
இதையும் படிங்க: மதக்கலவரம் ஏற்படுத்த மும்முரம்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு தேவை... திருமா வலியுறுத்தல்...!
கேள்வி கேட்கும் போது முறையாக பதிலளிக்காமல் மிரட்டல் மற்றும் உருட்டல் விடுப்பது, தங்களது தோல்விகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு சமம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
A common citizen has every right to question the Member of Parliament of his constituency on what tangible contributions have been made, beyond empty political rhetoric.
Why should such a basic, democratic question invite intimidation? This is not a question limited to the Karur… pic.twitter.com/xjXE7jSiIe
— K.Annamalai (@annamalai_k) January 7, 2026
இந்தச் சம்பவம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை எம்பி கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் உள்ளூர் மக்களில் ஒருவராக இருப்பதால், இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இண்டி கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து பாஜக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அக்கட்சிக்கு கூடுதல் ஆயுதமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் இதுவரை இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி அண்ணாமலை இந்தக் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக!! காடேஸ்வரா சுப்ரமணியம் கைதுக்கு நயினார் விளாசல்!!