நெல்லை : தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை நேரடியாகத் தாக்கி பேசி தமிழக அரசியல் களத்தைத் தீப்பற்ற வைத்தார். “நயினார் நாகேந்திரனுக்கு அமைதியானவர் என்ற ஒரு முகம் மட்டுமே எல்லோருக்கும் தெரியும். அயோத்தி பேச்சால் இன்னொரு முகத்தைக் காட்டிவிட்டார். அது வேண்டிய அவசியமே இல்லை. வாய் தவறி வந்த வார்த்தையைத் திருத்திக்கொண்டால் நல்லது” என்று கடுமையாகச் சாடினார்.
திருப்பரங்குன்றம் கோவில் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றி, சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டிய அப்பாவு, “மதுரைக்கு எய்ம்ஸ், மெட்ரோ ரயில் தேவை என்று சொல்ல வேண்டியவர், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.
அமைதியாக இருக்கும் இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும். 50 பேருக்கு பயிற்சி கொடுத்து சதி செய்கிறார்கள். காந்தியைக் கொல்வதற்கு கோட்சேக்கு பயிற்சி கொடுத்தது போல, அயோத்தியில் கரசேவை என்று சொன்னது போல தமிழகத்தில் திருப்பரங்குன்றத்தில் செய்கிறார்கள்” என்று கொதித்தெழுந்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா! பின்னணியில் பாக்.,?! முன்னாள் பென்டகன் அதிகாரி சந்தேகம்!

“ஆறு படை வீடுகளில் ஒரு இடத்தில் மட்டுமே சிக்கந்தர் தர்கா உள்ளது. அதை வைத்து சண்டை உருவாக்கி அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது. சட்டத்தின் ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலினால் நடத்தப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது.
இந்தியாவின் வழிகாட்டி தமிழகம்தான். 1967-ல் தொடங்கிய திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார், அண்ணா, கலைஞர், இப்போது ஸ்டாலின், உதயநிதி… வழி வழியாக இந்த ஆட்சி தொடரும்!” என்று உறுதிபடக் கூறினார்.
சபாநாயகரின் இந்த அதிரடி உரை, தமிழகத்தில் பாஜகவை நேரடியாகத் தாக்கி, 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. “அமைதி முகம் போதும்… கலவர முகம் வேண்டாம்!” என்ற அப்பாவுவின் ஒரு வார்த்தை இப்போது தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத்!! நமது கனவை அடைய ஏஐ உதவும்! சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை!