தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணிகளை முடுக்கிவிடும் வகையில், சென்னையின் பெரம்பூரில் இன்று மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து உரையாற்றினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு அரசியல் கூட்டத்திற்கு மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல் தன்னார்வத்துடன் தொண்டர்களைக் திரட்டும் சக்தி தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே உண்டு என்பதுதான் வரலாறு என அவர் மற்ற கட்சிகளைச் சாடினார்.
நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் பயணித்தவன். அதிமுக தொடங்கப்பட்ட போது வெறும் 26 வயதில் சட்டமன்ற உறுப்பினரானவன். எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரைப் பார்த்த எனக்கு, தற்போது 'புரட்சித் தளபதி' விஜய்யைப் பார்க்கும் போது அந்த ஆளுமை மீண்டும் வருவதை உணர முடிகிறது என உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: த.வெ.க விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு... N. ஆனந்த் முன்னிலையில் குவிந்த நிர்வாகிகள்!

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்ற பாடலுக்கு ஏற்ப, வரும் 2026 தேர்தலில் தமிழகத்தின் விதியை மாற்றப்போகும் தீர்ப்பைத் தளபதி விஜய் எழுதுவார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தளபதி தான் வெற்றி பெறுவார்; அதனை யாராலும் தடுக்க முடியாது எனச் சூளுரைத்தார்.
பெரம்பூர் மண்ணில் தவெக-வை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். ஜனநாயகத்தைக் காக்கின்ற ஒரே குரலாகத் தளபதியின் குரல் ஒலிக்கிறது என அவர் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
புரட்சித் தலைவருக்கும், அம்மாவுக்கும் பின்னர் தமிழகத்தை ஆளுகிற தகுதி மற்றும் மக்கள் செல்வாக்குத் தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது எனச் செங்கோட்டையன் பேசியது, அங்கிருந்த தொண்டர்களிடையே மிகப்பெரிய கரவொலியைப் பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் என்பதால், இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு தங்களது பலத்தை நிரூபித்தனர்.
இதையும் படிங்க: தென்னாட்டின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளுக்கு தவெக தலைவர் விஜய் மலரஞ்சலி!