தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக (ராமதாஸ் அணி) இணைவதா? என்பது தொடர்பான விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பாமக இருக்கும் எந்த கூட்டணியிலும் விசிக இடம்பெறாது என்ற 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "பாமக ராமதாஸ் அணியை திமுக கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும். நாங்கள் எந்த முடிவெடுக்கக் கூடிய நிலையில் இல்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முடிவை எடுத்துவிட்டோம். அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்" என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மோடி அரசை எதிர்க்க விஜய் பயப்படுறாரு!! பாஜக மிரட்டுதா? திருமாவளவன் விமர்சனம்!!
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் அணியை இணைக்க திமுக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் விசிகவின் இந்த கடும் எதிர்ப்பு திமுகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில், விசிகவின் ஐடியாலஜி அடிப்படையிலான எதிர்ப்பு (பாஜக அல்லது பாமக உடனான கூட்டணிக்கு எதிரானது) மாற்றமின்றி தொடர்கிறது என்று திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார்.
அதேநேரம், என்டிஏ கூட்டணியில் (அதிமுக-பாஜக) தமிழகத்தில் இரட்டை எஞ்சின் அல்லது டெல்லி எஞ்சின் என்று பேசப்படும் நிலைக்கு மாறாக, கூட்டணி யார் தலைமையில் இயங்குகிறது என்பதை தெளிவாக சொல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என்று திருமாவளவன் விமர்சித்தார். "இது அதிமுகவுக்கு பின்னடைவு தான். பிரதமரின் ஆதரவுடன் என்டிஏ ஆட்சி அமையும் என்று பேசும் நிலைக்கு வந்துள்ளது. அதிமுக பாஜகவின் பிடிக்குள் சென்றுவிட்டது" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக தலைமை இப்போது பாமகவை இணைப்பது குறித்து என்ன முடிவெடுக்கும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. விசிகவின் உறுதியான நிலைப்பாடு காரணமாக, திமுக கூட்டணியின் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு திமுக தலைமை கவனமாக இருக்க வேண்டியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த விவகாரம் திமுக கூட்டணியின் வலிமையை சோதிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: பண்பாட்டை சிதைக்கும் கும்பல்... சதி முயற்சியை முறியடிக்கணும்... திருமா. திட்டவட்டம்..!