ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, தற்போது எதையும் முழுமையாக பேச முடியாது என்றும், உரிய நேரத்தில் அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால், தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த திருநாவுக்கரசு, நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேசியது உண்மைதான் என தெரிவித்தார். ஆனால், அரசியல் ஆய்வாளராக தரவுகளை சேகரிக்கும் நோக்கத்திலேயே அவரை தொடர்பு கொண்டதாக விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு!
இந்த வழக்கில் தன்னுடைய தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முழுமையாக படித்துப் பார்த்தால் தனது நிலைப்பாடு தெளிவாக புரியும் என்றும் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்தார். ரூ.180 கோடி பேரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், சிங்கப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தனக்கு ஹவாலா பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார்.
“இந்த வழக்கை த.வெ.க. அரசு எனக்கு வழங்கிய பரிசாக பார்க்கிறேன். காலம் பதில் சொல்லும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.
தற்போது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ஒரு வார்த்தை பேசினாலும் அது தனக்கும் தனது குடும்பத்துக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். சரியான நேரம் வரும்போது அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன் என்றார்.
மேலும், சிறையில் இருந்த காலம் மிகவும் கடினமாக இருந்ததாகவும், சரியாக உணவு உட்கொள்ள முடியாமல் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்தார். அவரது இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெண்டர் ரத்து பின்னணியில் 10% கமிஷன்? முதல்வர் விஜய் வசம் உள்ள துறையில் அதிர்ச்சி குற்றச்சாட்டு!