திருப்பூர்: பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை போட்டியைத் தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினார்.
பெண்கள் நலனுக்காக நடைபெற்ற மாரத்தான்!
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவினாசி பகுதியில் பெண்கள் வலிமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தி இந்த மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள், இளம் பெண்கள், வயது வந்த பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ரூ.350-ஐ தொட்டது! தர்மபுரியில் நிலை என்ன?
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். மாரத்தானில் பங்கேற்ற பெண்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் ஓடியும் ஆதரவு தெரிவித்தார்.

10, 6, 3 கிலோமீட்டர் போட்டிகள்!
பங்கேற்பாளர்களின் வயது மற்றும் தகுதிக்கு ஏற்ப வெவ்வேறு தூரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்காக 10 மற்றும் 6 கிலோமீட்டர் பிரிவுகளும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு 6 கிலோமீட்டர் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு 3 கிலோமீட்டர் ஓட்டமும், தாயும் குழந்தையும் இணைந்து பங்கேற்கும் வகையில் ஒரு கிலோமீட்டர் பிரிவும் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அவினாசி பகுதியில் தொடங்கிய ஓட்டம், மங்களம் சாலை, கிழக்கு வீதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் திருப்பூர் சாலை உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக நடைபெற்றது. போட்டியின் பிரிவுகளுக்கு ஏற்ப வெவ்வேறு தூரங்களில் பங்கேற்பாளர்கள் ஓடினர்.
வெற்றியாளர்களுக்குப் பரிசுகள்!
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்துவதுடன், இளைஞர்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிப்பதும் நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்ததாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறினார். தென்னிந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் விழிப்புணர்வு மாரத்தானாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் செந்திலும் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்நலம், தன்னம்பிக்கை, பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, அவினாசி பகுதியில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் எதிரொலி! தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை!