2026-27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருமுலைவாசல் ஊராட்சி, தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை ஈரானிய கடல் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மாவீரன் என்ற 32 வயது மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மேலும், பால்ராஜ், சங்கர் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று மீனவர்களும் படுகாயமடைந்து சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
பேரவை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று ஆந்திர அரசு அதிகாரிகள் காசிமேட்டைச் சேர்ந்த எட்டு விசைப்படகுகளைப் பறிமுதல் செய்ததோடு, அந்தப் படகுகளில் சென்ற 80 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார்.
இதையும் படிங்க: கவன ஈர்ப்பு தீர்மானம்... கண்டுகொள்ளாத சபாநாயகர்..!! ஆத்திரத்தில் அதிமுக வெளிநடப்பு..!!
நேரமில்லா நேரத்தில், ஜீரோ ஹவரில், இதற்கு முந்தையிருந்த அரசாங்கங்கள் எல்லாமே முக்கியப் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்தைக் கொண்டு வருவது வழக்கம். நீங்கள் இப்போது கவன ஈர்ப்பு பற்றி குறிப்பிட்டீர்கள். அதேபோல, நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறபோது, அது அரசின் கவனத்திற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற தலைவர்கள், உறுப்பினர்கள் கொண்டு வருவது மரபு. அதையும் தாங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் சொல்ல வந்தேன் என இபிஎஸ் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், விதி 55-ன் கீழ் எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கப்படுகிற அறிவிப்புக்குத்தான் நான் பதில் சொல்லி விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் சிவகுமார் முடித்துவிடட்டும். முறைப்படி வாய்ப்பு தரப்படும் என்றார்.
நீங்கள் சொன்ன தீர்ப்பை ஒருவகையில் நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நீங்களே சொல்லிவிட்டீர்கள். இப்போது 55 விதியின் கீழ் கொடுக்கிறபோது, அது துறைக்கு அனுப்பப்பட்டு, அமைச்சர்கள் அதற்கு உரிய பதில் தர வேண்டும் என்பதற்காகக் காலதாமதம் ஏற்படுகிறது. அதே காலகட்டத்தில், உங்களைப் போன்ற நம்முடைய காலிமுத்து அவர்கள் இந்தப் பகுதியில் சேர்ந்து இருந்தார். அவர் வந்து இருந்தபொழுதுதான், அதற்கு முன்னால் இல்லாத ஒரு நடைமுறை கொண்டு வரப்பட்டது. அவசர முக்கியத்துவம் கருதி சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளும் நடைமுறை வழங்கப்பட்டது.
அதனால், ஒரு அவசரத்தைக் கருதித்தான் சில பிரச்சினைகளை நாங்கள் எழுப்புகிறோம். அது போய் 15 நாட்கள் சென்று, 20 நாட்கள் சென்று பதில் வந்தால் அதற்கு பொருள் இருக்காது. அதனால், 55 விதியின் கீழ் கொடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதைச் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளும் அதிகாரம் உங்களுக்குத்தான் இருக்கிறது. அதனால், நீங்கள் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், இல்லை, நான் சொன்னதும் 55 விதியின் கீழ் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நீங்கள் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்து என்று நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே இருமுறை இதே அவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக சிலவற்றை ஏற்றுக்கொண்டு நாம் விவாதித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த நடைமுறை தொடரும் எனக்கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!