பாஜக சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பரப்புரை பயணத்தை அக்டோபர் 12ம் தேதி மதுரையில் தொடங்குகிறார். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தனது பரப்புரையை நயினார் நாகேந்திரன் மேற்கொள்கிறார்.
நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயணத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தொடங்கி வைக்கிறார்.
இப்பரப்புரை பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்நிலையில் 12ம் தேதி மதுரையில் தொடங்கி சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்தியம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, கோவை,நீலகிரி, திருப்பூர், சேலம்,தருமபுரி, திருப்பத்தூர்,தஞ்சை, புதுக்கோட்டை, ராம்நாடு, விருதுநகர்,தூத்துக்குடி, கடைசியாக நவம்பர் 17ம் தேதி நெல்லையில் தனது முதல்கட்ட பரப்புரை பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் மதுரையில் அம்பிகா திரையரங்கம் பகுதியில் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி கொடுத்துள்ள நிலையில் பல்வேறு நிபந்தனைகளையும் கொடுத்துள்ளது. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!
சாலையின் இருபுறத்திலும் பிளக்ஸ், பேனர்கள் வைக்கக்கூடாது, குறிப்பாக சாலையின் நடுவில் கொடிக்கம்பங்களை ஊன்றக்கூடாது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. கூட்டத்தில் பெண்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக்குழு இருக்க வேண்டும். அவசர உதவிக்கு தன்னார்வலர் குழு கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பாஜக நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் மீறினால், அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ன பயமா? பதில் சொல்லுங்க முதல்வரே… கரூர் சம்பவம் குறித்து நயினாரின் நச் கேள்விகள்…!