தமிழ்நாட்டில் 24x7 கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுவதற்கான அனுமதி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 05.06.2022 முதல் மூன்று ஆண்டுகளுக்கு 24x7 செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 2023-ம் ஆண்டு, 365 நாட்களும் கடைகள் மற்றும் நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன்பிறகு 2025-ம் ஆண்டு, 05.06.2025 முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு 24x7 செயல்பட அனுமதி நீட்டிக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில், 365 நாட்களும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதியை மீண்டும் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!
இந்த நடைமுறையின் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் அதிக நேரம் கிடைக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அதே நேரத்தில், கடைகள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்பதால் பணியாளர்களை 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்ய வைக்கலாம் என்று பொருள் கிடையாது. அவர்களுக்கு வாராந்திர விடுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், ஓவர்டைம் ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகள் தொடர்ந்து பொருந்தும்.
இதற்கான கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடைகளை 365 நாட்களும் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டாலும், பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பணி நேரத்தில் எந்தவித தளர்வும் வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுகள் என்னென்ன?
- ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.
- பணியாளர்களின் விடுமுறை மற்றும் பணிப்பட்டியல் தொடர்பான விவரங்களை நிறுவனத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
- பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஓவர்டைம் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.
- சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணி நேர வரம்புகளைத் தாண்டி பணியாளர்களை வேலை செய்ய வற்புறுத்தக் கூடாது.
- கூடுதல் நேரப் பணி மேற்கொள்ளப்பட்டால், அதற்கான விதிமுறைகள் மற்றும் ஓவர்டைம் ஊதிய விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
இதையும் படிங்க: தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!