அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இன்று தருமபுரியில் நடைபெற்ற அமமுகவின் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் கள நிலவரங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் குறித்தும் திறந்த மனதுடன் பேசினார். அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில், கடவுள், ஜாதி மற்றும் மதம் பெயரால் யாரும் பதற்றத்தை ஏற்படுத்திச் சீர்குலைக்கக் கூடாது என்று அவர் உறுதியாக வலியுறுத்தினார். இந்தச் சூழலை நீதிமன்றமும் அரசும் சரியான முறையில் கையாண்டு அமைதியை நிலைநாட்டும் என்று நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வேறு கட்சிக்குச் செல்லவிருப்பதாகப் பரவும் வதந்திகளை அவர் அடிப்படையற்றது என்று நிராகரித்தார். வைத்தியலிங்கம் நிதானமாக யோசித்து முடிவெடுக்கக்கூடியவர் என்றும், இன்று காலையில் கூட தன்னுடன் பேசும்போது மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்தார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், வரவிருக்கும் ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை அவர் உறுதி செய்தார்.
நீதியரசர் மீது மனு கொடுத்துள்ள இந்தியா கூட்டணிக்குப் பெரும்பாண்மை இல்லை என்று சுட்டிக்காட்டிய தினகரன், பொதுவாக நீதியரசர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால்தான் இதுபோன்ற மனுக்கள் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். ஆனால், திமுக கொடுத்துள்ள மனு வித்தியாசமாக உள்ளது என்றும், அவர் கொடுத்த தீர்ப்பை திமுக ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவருடைய விருப்பம் என்றும் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், தங்களை யார் அணுகுகிறார்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்தே கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம்! கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்! - டி.டி.வி. தினகரன் சூளுரை!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருப்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, பாமகவின் பாலு தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், இதில் மாநில அரசு செய்ய வேண்டியது பெரிதாக இல்லை என்றும், பாமகவின் அழைப்பு கொடுத்த பிறகு ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் போன்று, கடவுள், மதம், ஜாதி பெயரால் கட்சிகள், அமைப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு நடந்தால் அதுதான் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதைச் சீர்குலைக்கும் என்றும், இதை அரசும் நீதிமன்றமும் சரியாகச் செய்யும் என்று நம்புவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "அமித் ஷாவைச் சந்திக்க மாட்டேன்!" தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்!