தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நடிகரும் தலைவருமான விஜய் தலைமையில், இரண்டாவது மாநில மாநாட்டை வரும் 21ம் தேதி மதுரையில் நடத்த உள்ளது. முதலில் ஆகஸ்ட் 25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக முன்கூட்டியே நடத்தப்படுகிறது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் இந்நிகழ்வு மாலை 4 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தனது அறிக்கையில், “தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தவெக மக்களின் ஆதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த மாநாடு கழகத்தின் அடுத்தகட்ட பயணத்திற்கு முக்கியமானது,” எனக் குறிப்பிட்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரையில் மாநாட்டு பணிகளை ஆய்வு செய்து, பிரம்மாண்டமான நிகழ்விற்கு தயாராகி வருகிறார்.
இதையும் படிங்க: யோவ்... அவங்க தேச விரோதிகளா? தூய்மை பணியாளர்கள் கைது… பாசிச திமுகவின் அராஜகம் என விஜய் கண்டனம்!
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வசதிக்காக, 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாட்டில்களில் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் குடிநீருக்கு தவிக்காமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாநாட்டிற்கு குழாய்கள், டேங்கர்கள் மூலமும் குடிநீர் வழங்கப்படவுள்ளது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே 506 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக, 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டு, விஜய் தொண்டர்களை சந்திக்க 800 அடி நடைமேடையும் தயாராகி வருகிறது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள், உணவு, கழிப்பறை, மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 217 ஏக்கர் வாகன பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டைப் போலவே, இதுவும் பிரமாண்டமாக இருக்கும் என தவெக தெரிவித்துள்ளது. முதல் மாநாடு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்று, 80,000க்கும் மேற்பட்டோரை ஈர்த்தது. இந்த மாநாட்டிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெகவின் கொள்கைகளான இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் இதில் விவாதிக்கப்படும். மதுரை மாநாடு, தவெகவின் அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களுக்கு பொறுப்புடனும் பாதுகாப்புடனும் கலந்துகொள்ள விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்! நம்ப தான் முதன்மை சக்தி.. விஜய் உத்வேகம்..!