தவெகவிற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரிக்கின்றனர். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது. இந்த ஆதரவுடன் தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட 25 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதன்படி இன்று 19 முதல் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அதில் தவெகவில் 19 பேர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியில் 2 பேருக்கும், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, இன்று பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத், அவினாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ ரஞ்சித்குமார், கும்பகோணம் எம்.எல்.ஏ வினோத், திருவாடனை எம்.எல்.ஏ ராஜீவ், அரக்கோணம் எம்.எல்.ஏ காந்தி ராஜ், ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ மதன் ராஜா, ராஜபாளையம் எம்.எல்.ஏ ஜெகதீஷ்வரி, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ விஜய் பாலாஜி, ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு, கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார், அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பேராஸ், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!
இதையும் படிங்க: எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!