கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக (தவெக) பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தீபாவளிக்கு முன்னதாக நினைவேந்தல் கூட்டம் நடத்த தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அந்த பிரச்சாரக் கூட்டத்தில், 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 50,000 பேர் திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் வருகை தாமதமானதாலும், முறையற்ற கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவும், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 ஆண்கள், 17 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!
இந்த சம்பவத்திற்கு தவெக மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் தனது உணர்ச்சிமிகு பேச்சில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தீபாவளிக்கு முன்பு, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் நினைவேந்தல் கூட்டங்கள் நடத்த வேண்டும் என தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டங்களில் 41 பேரின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சோக சம்பவம், அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: பூசணி தோட்டத்தையே சோத்துல மறைக்கப் பாக்குறாங்க… திமுகவை விளாசிய அதிமுக எம்.பி…!