கேரள அரசியலில் நீண்டகாலமாக எந்த முன்னணியிலும் சேராமல் தனித்துச் செயல்பட்டு வந்த தொழிலதிபர் சாபு ஜேகோப்பின் Twenty20 கட்சி, இன்று அதிகாரப்பூர்வமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் டுவென்டி 20 கட்சியின் தலைவர் சாபு ஜேகோப் ஆகியோர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கேரளச் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த ராஜதந்திர நகர்வு, அம்மாநிலத்தின் தேர்தல் களத்தை மும்முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் டுவென்டி 20 கட்சிக்கு எதிராக ஆளும் இடதுசாரி முன்னணியும் (LDF), எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்னணியும் (UDF) ரகசியமாகச் செயல்பட்டதாகச் சாபு ஜேகோப் குற்றம் சாட்டினார். "எங்கள் கட்சியை அரசியலில் இருந்தே ஒழிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்க எங்களுக்கு ஒரு வலுவான கூட்டணி தேவைப்பட்டது; அதற்கு என்.டி.ஏ-வை விடச் சிறந்த கூட்டணி எதுவுமில்லை" என்று அவர் தனது முடிவை நியாயப்படுத்தினார். மேலும், இது தனது வாழ்க்கைக்கும் கட்சிக்கும் ஒரு தீர்க்கமான முடிவு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது நடைபெறும் பிரம்மாண்டமான தேர்தல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி முன்னிலையில் சாபு ஜேகோப் மற்றும் அவரது கட்சியினர் முறைப்படி கூட்டணியில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'விக்சித் கேரளம்' (மேம்பட்ட கேரளம்) என்ற இலக்கை எட்டவும், கேரளாவின் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்தத் கூட்டணி உதவும் என பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து.. அடுத்தது என்ன? பியூஷ் கோயலுடன் முக்கிய ஆலோசனை!
கிடெக்ஸ் (Kitex) குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் Twenty20 கட்சி, குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ளது. 2021 தேர்தலிலேயே தனித்துப் போட்டியிட்டு சுமார் 15 சதவீத வாக்குகளைச் சில தொகுதிகளில் பெற்ற இந்தக் கட்சி, இப்போது பாஜகவுடன் இணைந்துள்ளதால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் விரிசல் ஏற்படும் எனக் கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு போவாருன்னு தெரியும்.. வெட்டத்தான் ஆடு வாங்குறாங்க! தினகரனை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா.. !