தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக்) மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கட்சியின் மாவட்ட செயலர்கள் நியமனம் முழுமையாக முடிந்துவிட்டதாகவும், அனைத்து நிர்வாகிகளும் அந்தப் பொறுப்புகளை மனமுவந்து ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாவட்ட செயலர்கள் நியமனம் முடிந்துவிட்டது. இதில் எந்த மாற்றமும் இல்லை; இதுவே இறுதியானது. நிர்வாகிகள் என்னை நேரில் வந்து சந்தித்து நெருக்கடி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் 15 மணி நேரத்திற்கு மேல் பொதுமக்கள், நிர்வாகிகளை சந்திப்பதிலேயே செலவாகிறது. ஓய்வு, உறக்கமின்றி பல சுமைகளுக்கு இடையே இந்தப் பணிகளை செய்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நியமிக்கப்பட்ட பொறுப்புகளை மனமுவந்து ஏற்று, முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், தேர்தலுக்கு பிறகு அமைதியாக ஆற அமர பேசி முடிவு செய்வோம். இப்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஒற்றுமையுடன் பணியாற்றுவதே முக்கியம்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

காரைக்குடி மாவட்ட செயலர் தேன்மொழி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலராகவும், திண்டிவனம் மாவட்ட செயலர் நாகராஜன், மண்டல துணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் அந்தப் பொறுப்புகளிலிருந்து விடுவித்ததற்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும், அவர்கள் தனக்காக இதை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விசிக கட்சியில் நிர்வாக மறுசீரமைப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாவட்டம், மண்டலம், மாநில அளவில் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நியமனங்களை ஏற்று, கட்சியின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று திருமாவளவன் நிர்வாகிகளிடம் கோரியுள்ளார்.
இந்த அறிக்கை கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் களத்தில் விசிக் கட்சியின் ஒற்றுமை மற்றும் பலம் மக்களுக்கு எட்ட வேண்டும் என்பதற்காகவே தலைவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். வரும் நாட்களில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 4 கட்சிக்கு 5 சீட்டா? எப்படி பத்தும்?! 24 சீட் கேட்கும் முஸ்லிம் கட்சிகள்! திமுகவுக்கு அதிர்ச்சி?!