தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் "தயவு செய்து கொஞ்சம் ஒற்றுமையாக இருங்கள்" என்று வேண்டிய விஜய்யின் இந்த பேச்சு, தவெகவுக்குள் உட்கட்சிப் பூசல் இருப்பதை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூட்டத்தில் முன்பு பேசிய புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் ஒற்றுமைக்கு வலியுறுத்தியிருந்த நிலையில், விஜய்யின் இந்த வேண்டுகோள் கட்சியின் உள் பதற்றத்தை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் அளித்த பேட்டியில் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். "இது சினிமா ஸ்டைல் பேச்சு... அதற்கு மேல் இதில் முக்கியத்துவம் இல்லை" என்று கூறிய அவர், விசில் சின்னம் கிடைத்த பிறகு நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே விஜய் இப்படிப் பேசியிருப்பதாகக் கருதுகிறார்.
"ஆழ்ந்த அரசியல் ஞானமோ தெளிவோ அவரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியொரு பேச்சும் இதில் இல்லை. கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தவே 'தீய சக்தி - அடிமை சக்தி' என்று பேசியிருக்கிறார்" என்று தராசு ஷியாம் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அரியணை ஏறுவாரா விஜய்? தவெக முன்னாள் இருக்கும் சவால்கள்?! தவிக்கும் தொண்டர்கள்!
தமிழக அரசியலில் மாநில நலன், மொழி உரிமை, பெண் உரிமை, சமூக நீதி போன்றவை 100 ஆண்டுகளுக்கும் மேலாக மையமாக இருந்து வருகின்றன. "விஜய் சினிமாவில் வெற்றிகரமாக இருந்தாலும், இவற்றைப் பாதுகாக்கும் திறன் உள்ளதா என்று மக்கள் எப்படி நம்புவார்கள்?" என்று தராசு ஷியாம் கேள்வி எழுப்பினார்.
அண்ணாவை உதாரணமாகக் காட்டிய அவர், அண்ணா 1949-ல் கட்சி தொடங்கி பல கட்டங்களைத் தாண்டி 1967-ல் தான் ஆட்சியைப் பிடித்தார் என்றும், பெரியாரிடம் பல ஆண்டுகள் அரசியல் பயின்ற பின்னரே அவர் தனிக்கட்சி ஆரம்பித்தார் என்றும் விளக்கினார். "எடுத்தவுடன் கட்சியை ஆரம்பித்து உடனடியாக முதல்வராவது சினிமாவில் மட்டுமே சாத்தியம். இந்தச் சினிமா ஸ்டைலைத் தான் அவர் அரசியலிலும் கையாள்கிறார்" என்று தராசு ஷியாம் கூறினார்.
ஒற்றுமை குறைபாடு குறித்து பேசிய அவர், "விஜய் மட்டும் இல்லை... அவருக்கு முன்பு பேசிய ஆனந்த்தும் அதைத் தான் சொன்னார். அதற்கு முன்பு பேசியவர்களும் அதைத் தான் சொன்னார்கள். கட்சியில் ஏதோ ஒற்றுமை குறைபாடு இருக்கிறது. அது விஜய்யின் கவனத்திற்குப் போய் இருக்கிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

தவெகவின் தற்போதைய நிலையை ரசிகர் மன்ற அரசியலுடன் ஒப்பிட்ட அவர், "ஒரு ஊரில் ஒரு ஹீரோவுக்கு ரசிகர் மன்றம் இருக்கும். அங்குப் பிடிக்காதவர் இன்னொரு ரசிகர் மன்றத்தை அதே ஊரில் தொடங்குவார். அதுபோலத் தான் இவர்களும் செயல்படுகிறார்கள்" என்று விமர்சித்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக மகளிர் அஜிதா ஆக்னல் கட்சிப் பொறுப்பு கேட்டு விஜய்யின் காரை மறித்த சம்பவம், கட்சியில் உள்ள உள் பதற்றத்தை மேலும் வெளிப்படுத்தியது. பொறுப்பு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்த அந்தப் பெண்ணின் சம்பவம் கட்சியின் உள் மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டதும், நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்காததும் கட்சியின் அமைப்பு ரீதியான பலவீனத்தை காட்டுகிறது. இந்த பிரச்சினைகள் தலைமைக்கு தெரிந்ததாலேயே விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் ஒற்றுமைக்கு வலியுறுத்தி பேசியுள்ளனர்.
தவெகவில் உள்ள இந்த உள் பூசல்கள் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற அச்சம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. விஜய்யின் சினிமா ஸ்டைல் அணுகுமுறை அரசியலில் எவ்வளவு தூரம் எடுபடும் என்பது இன்னும் சோதனைக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியை அதிர வைத்த விசில் சப்தம்!! விஜயின் ப்ளான் B! அமித்ஷாவையே அலறவிட்ட தளபதியின் சீக்ரெட்மூவ்!!