தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் டிசம்பர் 16ஆம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அனுமதி மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: இணைந்த அடுத்த நாளே பதவி: தவெகவின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தை நியமித்து விஜய் உத்தரவு..!!
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தத் த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்குத் தேவையான போதிய வசதிகள் இல்லை என்று காரணம் கூறி மாவட்ட எஸ்.பி. அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனுமதி மறுப்பு குறித்த தகவல்கள் வெளியான போதிலும், த.வெ.க.வின் நிர்வாகிகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்:
"மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப நாங்கள் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். உரிய அனுமதியைப் பெற்றவுடன் வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என்று தவெக தரப்பினர் தெரிவித்தனர்.
ரோடு ஷோ தவிர்க்கப்பட்டு, தற்போது தனியார் இடத்தில் மட்டுமே நிகழ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஏற்கனவே, விஜய்யின் புதுச்சேரி ரோடு ஷோவுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஈரோட்டிலும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. "தமிழகமே ஒரு திருப்புமுனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் சக்தி அவரை அங்கே அமர்த்தும். பெரிய மாற்றங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன," என்று தவெக நிர்வாகிகள் உறுதியுடன் தெரிவித்தனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விகளுக்கு, "ஒவ்வொரு இயக்கங்களும் தங்களது கொள்கையை இறுதி செய்துள்ளனர். நல்ல மனதோடு தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் வரும்போது தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரோடு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புகள் உள்ளது," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!