திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவரும் திமுக நிர்வாகியுமான ஜாகிர் உசேன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்கள் வைரலாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுடன் அவர் இருந்த புகைப்படங்களுடன் இணைத்து இந்த ஆடியோக்கள் பரவின.
ஆடியோவில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பரிந்துரைக் கடிதத்திற்கு மரியாதை கொடுக்காத அன்பில் மகேஷ் கைதாவது வரவேற்புக்குரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது மனைவி நபிஷா பேகம் அரசுப் பள்ளி ஆசிரியை என்றும், அவரது பணி மாறுதலுக்காக 7.7 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு தலைமை ஆசிரியர் மூலம் அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலகம் வழியாக சென்னையில் அந்தத் தொகையைக் கொடுத்ததாக ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐந்து தொகுதி இடைத்தேர்தல்! அன்பில் மகேஷ் கைதால் திமுகவுக்கு பின்னடைவு! தவெக கையில் அஸ்திரம்!

மேலும், திண்டுக்கல் மாவட்டம் வளவிசெட்டிபட்டியில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் 11 ஆசிரியர்கள் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், கட்சிக்காரருக்கே இந்த நிலை என்பதால் அன்பில் மகேஷின் கைது குறித்து வருந்த ஒன்றுமில்லை எனவும் பேசப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ வெளியானதை அடுத்து, ஜாகிர் உசேன், அவரது மனைவி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த ஆசிரியர்களின் பணி மாறுதல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஜாகிர் உசேன் நேற்று வெளியிட்ட மறுப்பு வீடியோவில், அந்த ஆடியோவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி முறைகேடு! அன்பில் மகேஷ் வழக்கில் பெருங்குடியில் அதிரடி சோதனை! ஷண்முக பிரியா வீட்டில் ரெய்டு!