டெல்லி: காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ், கடைசியாக பீஹார் சட்டசபைத் தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. ராகுல் காந்தி எழுப்பிய ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். விவகாரங்கள் எதுவும் மக்களிடம் எதிரொலிக்கவில்லை.
அதேநேரம், பல மாநிலங்களில் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர், பீஹாரில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கினார். நடைபயணம், பிரசாரம் உள்ளிட்ட அவரது திட்டங்கள் எதுவும் எதிரொலிக்கவில்லை. அவரது கட்சியும் பீஹாரில் படுதோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி என் குடும்பம் கிடையாது!! ஆனாலும்! பார்லி-யில் ப்ரியங்கா காந்தி ஃப்யர் பேச்சு!
இந்தச் சூழலில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் பிரியங்கா காந்தியும் பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு தரப்பும் இதை உறுதிப்படுத்தவில்லை. பிரியங்கா காந்தி கூறுகையில், “நான் யாரைச் சந்திக்க விரும்புகிறேன், யாரைச் சந்திக்க விரும்பவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.
இருவரும் சந்திப்பது இது முதல்முறை அல்ல. 2022-இல் காங்கிரஸுக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் காங்கிரஸில் சேருவதாக இருந்தது. கட்சியை சீரமைக்க அறிக்கை அளித்தார். குழு அமைக்க சோனியா ஒப்புக்கொண்டார். ஆனால் சுதந்திரமாக செயல்பட அனுமதி கிடைக்காததால் பேச்சுவார்த்தை நின்றுபோனது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரும் எண்ணத்தை கைவிட்டார்.
பீஹார் தோல்விக்குப் பிறகு தனது அரசியல் எதிர்காலத்தை ஆய்வு செய்து வரும் பிரசாந்த் கிஷோருடனான இந்தச் சந்திப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் இல்லை… இனி 125 நாள்!! பார்லியில் புதிய மசோதா தாக்கல்!! சிறப்பம்சங்கள் என்ன?