தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், இன்று கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த முடிவு கட்சியின் உள் இயக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வைகைச் செல்வன் அ.தி.மு.க.வில் பல தசாப்தங்களாக தீவிரமாக ஈடுபட்டவர். 2011 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைமைக் கொறடா பொறுப்பு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
கட்சியின் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் போன்ற பதவிகளிலும் நீண்ட காலம் பணியாற்றினார். ஜெயலலிதா காலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமை வரை அவர் கட்சியின் விசுவாசமான குரலாகவே அறியப்பட்டார். அண்மையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதிமுக சார்பில் தீவிரமாகப் பங்கேற்று, கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர். இருப்பினும், கட்சியின் உள் மோதல்கள், தலைமை முடிவுகள் மற்றும் தனிப்பட்ட புறக்கணிப்பு உணர்வு ஆகியவை அவரை இந்தத் தீவிர முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளன என்று தெரிகிறது.

அவர் தனது விலகல் கடிதத்தில், உணர்வுகளை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “செல்லாது... செல்லாது...” - எஸ்.பி.வேலுமணி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்... நீதிபதிகள் கடும் எச்சரிக்கை...!
மேலும், “சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது” என்று வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கழகத்திற்காகப் பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால் “மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு” என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். மாணவப் பருவம் முதல் இயக்கத்தோடு இருந்த ரத்தம் சதையான உறவைப் பிரிவதன் வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும், புதிய இடத்தில் பழைய மண்ணைப் போல நினைவுகளை என்ன செய்வது என்றும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் கரைந்த அதிமுக கூடாரம்... தவெகவுக்கு தாவிய முக்கிய புள்ளிகள்... பட்டியலை பார்த்தாலே தலை சுத்துதே...!!