நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையில் சுமார் ஒரு கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது, இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பாஜக மூத்த தலைவர் மற்றும் தெலுங்கான முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து திமுக உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளை வறுத்தெடுத்தார்.
"தமிழகம் முழுவதும் ஒரு கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. உண்மையில் இவர்களை நாம் 'வாக்காளர்கள்' என்று அழைக்கவே கூடாது; 'வாக்காளர்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். தகுதியற்றவர்கள், இறந்துபோனவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களே இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளன" என்று தமிழிசை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: மக்களே லாஸ்ட் சான்ஸ்! இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்! நாளை கடைசி நாள்!
மேலும், இந்தச் சிறப்புத் திருத்த நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏன் எதிர்த்தார்கள்? தேர்தல் முடிந்த பிறகு திருத்தம் செய்யலாம் என அவர்கள் கூறியதன் ‘மர்மம்’ என்ன? இந்த ஒரு கோடி போலிப் பெயர்களை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அதிக அளவிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "இதுவே இந்தத் திருத்த நடவடிக்கையின் அவசியத்தை ஊருக்கே உரக்கச் சொல்கிறது" என்றார். "தேர்தல் ஆணையத்தின் இந்தத் தூய்மைப்படுத்தும் பணியால், இறந்தவர்களின் ஆன்மாக்கள் இனி தேர்தல் நேரத்தில் அமைதியாக இருக்கும். திமுகவினர் இனி அவர்களைத் தொந்தரவு செய்ய முடியாது" என்று விமர்சித்தார். நாளை பாஜக தேசியச் செயல் தலைவர் தமிழகம் வருவது கட்சித் தொண்டர்களிடையே பெரும் எனர்ஜி கொடுத்துள்ளதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாபெரும் வெற்றி பெறும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: "போலி வாக்காளரை கண்டறியும் மென்பொருள் பயனற்றது": உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!