திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நாப்பலூர் கிராமத்தில், ஒரு தாயின் கண்ணெதிரே, பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி அவரது 2 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் குமார், மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகன் முகிலன், திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள நியூ ஈடன் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை, மூத்த மகனைப் பள்ளி வேனில் ஏற்றி அனுப்புவதற்காகத் தாய் மணிமேகலை, தனது 2 வயது மகளுடன் வந்துள்ளார்.
மூத்த மகனை மகிழ்ச்சியுடன் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு மணிமேகலை திரும்பியபோது, எதிர்பாராத விதமாக அவரது 2 வயது மகள் பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கியுள்ளார். ஆனால், ஓட்டுநரோ, குழந்தை டயருக்கு அடியில் சிக்கியதைக் கவனிக்காமல் வேனை இயக்கிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுர சம்பவத்தால் தாய் மணிமேகலை நிலைகுலைந்து கதறி அழுத சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கள்ள மது விற்பனை ஜோர்... வைரலாகும் ட்ரோன் காட்சிகள்...!
இந்தத் துயரச் சம்பவம் குறித்த தகவலறிந்த திருத்தணி காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநர் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு தாயின் கண்ணெதிரே நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவம், பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பு உட்பட பல்வேறு கேள்விகளை
எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூரில் கோர விபத்து: அரசு - தனியார் பேருந்துகள் மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!