ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது மூன்றாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் மீது மூன்றாவது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 2004ஆம் ஆண்டு 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாகவும் புதிய போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வீரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
2025ஆம் ஆண்டு தொடங்கிய வழக்கு:
2025ஆம் ஆண்டு அக்டோபரில் வீரமணி மீது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாருடன் சிறுமி தொடர்பான வீடியோ ஆதாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 2026 பிப்ரவரியில் வழக்கை முடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த முடிப்பு அறிக்கையை ஏற்காமல், மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பின்னர் நடைபெற்ற மறுவிசாரணையில், வீடியோவில் இருந்ததாகக் கூறப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
வீரமணி உள்ளிட்டோர் கைது:
மறுவிசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கணேசனும் செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் வீரமணி மற்றும் சிறுமி தொடர்பான வீடியோ இருந்ததாகவும், அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனால், தற்போதைய முக்கிய வழக்கில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004ஆம் ஆண்டு மாணவி தற்கொலை விவகாரம்:
இந்நிலையில், 2004ஆம் ஆண்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
அந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்ற வீரமணி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதன் பின்னர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் 2004ஆம் ஆண்டிலேயே புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அந்த விவகாரம் தொடர்பாக வீரமணி மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிய போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் வீரமணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணையின்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், இதையடுத்து அவரை மீண்டும் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை:
வீரமணி தொடர்பான வழக்குகளின் விசாரணைக்காக தமிழக காவல்துறை நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடம் உள்ள ஆதாரங்களை பெறுவதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் தொடர்பு எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த எண்ணுக்கு மூன்று புகார்கள் வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாந்தி, மகேந்திர சிம்ஹன் மீதான விசாரணை:
வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அவர்களிடம் மேலும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை ஆண்டுகளாக இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது, மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மூன்று நாள் காவல் விசாரணை முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைக்கவோ, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தவோ வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.