சேலம் மாவட்டம், ஓமலூர் சாலையில் உள்ள அண்ணா பூங்கா நுழைவாயிலில் முத்தமிழறிஞர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகள் அடுத்தடுத்து உள்ளன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 16 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சிலையின் வேஷ்டி அணிந்த பகுதியை கருப்பு பெயிண்டால் பூசியுள்ளனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை கேள்விப்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சிலை அமைந்துள்ள பகுதியில் திரண்டுள்ளனர். மேலும் சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் அஸ்வினி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். சிலையின் கீழே பெயிண்ட் டப்பா ஒன்றும், பெயிண்ட் நனைக்கப்பட்ட துணி ஒன்றும் கிடந்தது. இதனையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை கொலை செய்ய பாத்தாங்க! பரப்புரையில் இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த செயலில் ஈடுபட்ட 77 வயது மருத்துவரான விஸ்வநாதன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் எதற்காக இப்படி செய்தீர்கள்? இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் தூண்டியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவரும், மறைந்த முதலமைச்சருமான கருணாநிதியின் சிலையை அவமதித்த இந்த செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
காவல்துறையினர், இந்த செயலுக்கு பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் கலவர நோக்கங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். சிலை அவமதிப்பு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல் எனவும், இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது எனவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இது நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதையும் படிங்க: விடுதி உணவை சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவிகள்.. வாந்தி, மயக்கத்தால் ஹாஸ்பிடலில் அட்மிட்..!