திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறநிலை துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அல்லது மறு உத்தரவுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, பெரிய கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில்30க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலையாருக்கு அரோகரா...!! கொட்டும் மழையிலும் குறையாத பக்தி பரவசம்... திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்...!
திண்டுக்கல் நகரின் மத்தியில் புகழ்பெற்ற திண்டுக்கல் மலைக்கோட்டை அமைந்துள்ளது.கோட்டையின் உச்சியில் உள்ள கோவிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று 03.12.25 பெரிய கார்த்திகை முன்னிட்டு மலைக்கோட்டையில் உள்ள விளக்கு தூணில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தீப்பந்தத்துடன் மலைக்கோட்டைக்குச் சென்று தீபம் ஏற்ற உள்ளதாக இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மலைக்கோட்டைக்குச் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே மலைக்கோட்டைக்கு சென்று தீபம் ஏற்ற செல்ல அனுமதி கிடையாது என காவல்துறையினர் தெரிவித்தனர் தடையை மீறி சென்றால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியினர் மலைக்கோட்டைக்குச் சென்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. தற்பொழுது மலைக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!