கடந்த சில மாதங்களாக ஏர் இந்தியா விமானங்களில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப கோளாறுகள் பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பயணிகளுடன், விமானம் விழுந்த விடுதியிலும் பலர் உயிரிழந்தனர். இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்ப வைத்தது.
இந்தக் கோர விபத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள், தொடர்ச்சியாக ஏர் இந்தியா விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து புகார்கள் எழுந்து வருகின்றன. விமானப் பாகங்கள் செயலிழத்தல், இயந்திரக் கோளாறுகள், எரிபொருள் சிந்தும் நிலை, பாதுகாப்பு எச்சரிக்கைகள் எனப் பல்வேறு பிரச்சனைகள் பயணத்தின் நடுப்பாதியில் நேர்ந்திருப்பது பயணிகள் உயிருக்கு அபாயமாகத் திகழ்கிறது.
இதன் தொடர்ச்சியாக சற்று நேரத்திற்கு முன்பு, சென்னையிலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானி அதனை உரிய நேரத்தில் உணர்ந்து விமானத்தை நிறுத்தியதால், அதில் இருந்த 191 பயணிகள் உயிர் தப்பினர். ஒரே மணி நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விமான விபத்து...நாங்க தான் காரணமா? கொதித்துப்போன விமானிகள் யூனியன்
இந்தச் சம்பவங்கள், ஏர் இந்தியா தனது விமானங்கள் மீது போதுமான பராமரிப்பு பணிகளைச் செய்கின்றதா என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. விமான பயணிகளின் உயிர் மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, விமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச் சீராகவும் கண்டிப்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏர் இந்தியா இவற்றை முன்னிறுத்தி நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதே, பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரே வழியாகும்.
இதையும் படிங்க: “தலை, கை, கழுத்தில் காயம்...” பழங்குடி லாக்அப் மரணம் குறித்து மனைவி பகீர் பேட்டி...!