தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் ஆகாஷ் பாஸ்கரன், டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் (ED) விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் 2025 மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அமலாக்கத் துறை அதிகாரிகள், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு 'சீல் வைத்தனர். மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு, நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆகாஷ் பாஸ்கரன், டான் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, சிம்புவின் 49வது படம் உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். குறுகிய காலத்தில் அவரது அசுர வளர்ச்சி மற்றும் 500 கோடிக்கு மேல் முதலீடு குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
இதையும் படிங்க: ரூ.17000 கோடி கடன் மோசடி.. வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம்.. அனில் அம்பானியை நெருங்கும் ED!!
நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட மனுதாரார்களுக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு அவர்களின் அலுவலகங்களுக்கு சீல் வைத்ததையும் ரத்து செய்யச் சொல்லி உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யத் தவறிய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில், அமலாக்கத்துறைக்கு இரண்டு முறை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டும், அவர்கள் தாமதித்ததால் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று, அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வழக்கு, ஆகாஷ் பாஸ்கரனின் திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவரது வணிக பின்னணி குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணை மற்றும் இந்த அபராதம் தமிழ் திரையுலகிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூதாட்ட செயலி வழக்கு.. ED அலுவலகத்தில் ஆஜரான பிரகாஷ் ராஜ்.. கிடுக்குப்பிடி விசாரணை..!!