2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அமித் ஷா அளித்த சிறப்பு பேட்டியில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்களா என்ற கேள்விக்கு தான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு இருக்கும் என்றும் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் தேர்தலில் தாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுவதாகவும் முதலமைச்சர் அதிமுகவில் இருந்து வருவார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கை; பொம்மை முதல்வர்... ஸ்டாலினை கழுவி ஊற்றிய ஈபிஎஸ்!!

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆந்திர பிரதேசத்திற்கு வழங்கியது போல் சிறப்பு மேம்பாட்டு நிதி தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், தமிழகத்திற்கு ஏற்கனவே தாங்கள் நிறைய வழங்கி இருப்பதாகவும், மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் நிச்சயமாக தங்களது பொறுப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த பேட்டியில் அதிமுகவில் இருந்து முதலமைச்சர் வேட்பாளர் வருவார் எனத் தெரிவித்திருப்பது அதிமுகவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் என்பதை அமித் ஷா மீண்டும், மீண்டும் கூறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்துள்ள பாஜக, தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவது தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறிவரும் நிலையில், அமித் ஷாவின் இந்த கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... அதிமுக பிரமுகர் வெறிச்செயல்...!