தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்ததாக எழுந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் முத்துக்குமார், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நெருங்கிய உதவியாளராகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளராகவும் அறியப்படுபவர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து நிரந்தர அங்கீகாரம், அனுமதிகள் மற்றும் புதுப்பிப்புகள் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் தொடங்கியது. பள்ளி நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், வசூலிக்கப்பட்ட தொகை ரூ.100 கோடியைத் தாண்டி 400 கோடி வரை இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது.

பணம் கட்சி நிதி என்ற பெயரில் சேகரிக்கப்பட்டதாகவும், அதன் இறுதி இலக்கு யாரென்பதை கண்டுபிடிக்க காவலில் விசாரணை தேவை என்றும் நீதிமன்றங்களில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.வழக்கின் ஆரம்ப கட்டத்தில் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். முத்துக்குமார் தலைமறைவாக இருந்தார்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!
அவரது முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தை அணுகிய அவரது மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு, வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணைக்கு அவர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த முத்துக்குமார் இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்தார்.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கும் வச்சாச்சு செக்!! ஆதவ் அர்ஜூனா குறித்த அவதூறு பேச்சு! முன்ஜாமீன் கோரி மனு!