தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட பெரும் ஊழல் வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. குற்றப்பிரிவு போலீசார் அவரை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் இரண்டாம் தேதி பிற்பகல் பன்னிரண்டு மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது அன்பில் மகேஷ் தரப்பிலும், அரசு தரப்பிலும் காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அன்பில் மகேஷை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும், அவருக்கு வீட்டு உணவு மற்றும் மருந்துகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், அவர் இரண்டு முதல் நான்கு கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளதாகவும், எனவே வீட்டு உணவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சோதனைக்கு வந்தபோது காவல்துறையினரை யாரும் தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ரகசிய கல்லாப்பெட்டி?... சண்முகப்பிரியா வீட்டில் சிக்கியது முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... அன்பில் மகேஷ் வழக்கில் அதிரடி திருப்பம்...!
தொடர்ந்து, தனியார் பள்ளிகளின் சங்கங்களே அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்ததாக அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டியிருந்த நிலையில், அதனை 20 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்று அந்தச் சங்கங்கள் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அந்தச் சங்கங்களைச் சேர்ந்தவர்களே இந்த வழக்கில் சாட்சிகளாக இருப்பதாகவும், அவர்களது கோரிக்கையின் அடிப்படையில்தான் விதிமுறைகள் மாற்றப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
மேலும், அங்கீகாரப் புதுப்பித்தல் தொடர்பான முடிவுகள் கூட்டாக எடுக்கப்பட்ட நிலையில், தன் மீது மட்டும் ஏன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அன்பில் மகேஷ் தரப்பு கேள்வி எழுப்பியது. தனியார் பள்ளி சங்கத்தினர் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்றும், பணம் கொடுத்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.
அன்பில் மகேஷ் பணம் கேட்டார் என்பதற்கோ அல்லது அங்கீகாரத்தைப் புதுப்பிக்க அனுமதி வழங்குவதற்காகப் பணம் பெற்றார் என்பதற்கோ ஏதேனும் ஒரு ஆதாரம் உள்ளதா என்றும் அவரது தரப்பு கேள்வி எழுப்பியது. பணம் கேட்டதற்கோ, பெற்றதற்கோ சாட்சிகள் அல்லது ஆவணங்கள் உள்ளனவா என்றும், அவை விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசியல் காரணங்களுக்காகவே தாம் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்துவதற்கு ஆட்சேபனை இல்லை என்றாலும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என்றும் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதியைத் துன்புறுத்தக் கூடாது என்றும், விசாரணை நடவடிக்கைகள் அவருக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், அவருக்கு வீட்டு உணவு மற்றும் மருந்துகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அறிவாலயத்தை அதிரவிட்ட தவெக... முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப்பதிவு... காரணம் என்ன?