சென்னை: பாமகவில் தொடரும் அப்பா-மகன் மோதல் காரணமாக கூட்டணி அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் கடும் எதிர்ப்பால், அவரது தந்தை டாக்டர் ராமதாஸை அதிமுக-பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ராமதாஸ் தரப்பு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது அல்லது 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 7-ம் தேதி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், "நான் தான் பாமக தலைவர். என்னுடன் மட்டுமே கூட்டணி பேச வேண்டும்" என்று திட்டவட்டமாக கூறினார்.
ஆனால், அதிமுக மற்றும் பாஜக தரப்பு ராமதாஸை கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, ராமதாஸ் தரப்பு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், விசிக எதிர்ப்பு காரணமாகவும், களத்தில் விசிக-பாமக தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்பதாலும் திமுக தயக்கம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: பொய்யர்கள், புரட்டர்கள்!! எது வேண்டுமானாலும் சொல்வார்கள்! அன்புமணியை கிழித்த ராமதாஸ்!
இந்நிலையில், "ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால், அதிமுக-பாஜக கூட்டணியில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். ஜி.கே. மணி போன்றவர்களுக்காக களத்தில் நாங்கள் தேர்தல் வேலை செய்ய முடியாது" என்று அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், அல்லது 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு நடப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மறுபக்கம், மதுராந்தகத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் பாமகவின் மாம்பழம் சின்னம் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், "நான் நிறுவிய பாமகவின் வரலாற்று சின்னமான மாம்பழம், மோடி பங்கேற்ற மேடையில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சட்டவிரோதமானது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. தமிழக மக்களை ஏமாற்றும் செயல். தேர்தல் ஆணையம் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
பாமகவின் இந்த உள் மோதல் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி தரப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் உறுதியாக இருக்கும் நிலையில், ராமதாஸ் தரப்பின் அடுத்தகட்ட முடிவு தமிழக அரசியல் களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: ராமதாஸ் குடும்பமே நேருக்கு நேர் போட்டி? சமூக மோதலாக மாறும் அபாயம்?! பாமக நிர்வாகிகள் கவலை!