ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வெள்ளாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. வயது 75. இவரது மனைவி பாக்கியம்மாள் வயது 65. இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கவிசங்கர் கடந்த இருநாட்களாக பெற்றோரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். யாரும் போனை எடுக்கவில்லை.

கவிசங்கர் அருகில் இருந்தவர்களை சென்று பார்க்க கூறி உள்ளார். அப்போது ராமசாமி வீட்டுக்கு உள்ளேயும், பாக்கியம்மாள் வீட்டுக்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி, தங்கவளையல் உள்ளிட்ட 15 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. சம்பவ இடத்தில் ஈரோடு எஸ்பி சுஜாதா, பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்!

பல்லடம் அருகே தம்பதி மற்றும் அவர்களது மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொங்கு பகுதியில் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியாக வசிக்கும் தம்பதிகளை நோட்டமிட்டு சம்பவம் நடக்கிறதா என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த நிலையில் ஈரோட்டில் விவசாய தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன? பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?

திமுக அரசால், தொடர் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டு மொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள். என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து உள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!