சி.விஜயபாஸ்கர், 2011 முதல் 2021 வரை தமிழக சுகாதார அமைச்சராக பணியாற்றியுள்ளார். விராலிமலை தொகுதியில் இருந்து 2011, 2016, மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். இவர் மீது ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல சர்ச்சைகள் உள்ளன. முன்னதாக, அவரது வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, இது அவரது அரசியல் எதிரிகளுடனான மோதல்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதார அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள இல்லத்திற்கு புதன்கிழமை (செப்டம்பர் 3) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையும் படிங்க: இங்கயும் விட்டுவைக்கலயா..?? நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
இந்த மிரட்டல் குறித்து தகவல் அறிந்த உடனே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை உடனடியாக விஜயபாஸ்கரின் வீட்டிற்கு விரைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு அவரது இல்லத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல் இலுப்பூர் ராஜேஸ்வரி டவுன்ஷிப்பில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கும் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு?? என்று பள்ளிக்கு வந்த இமெயிலில், இன்று பிற்பகல் 2 மணிக்கு பள்ளியிலும், அதன் பிறகு 20 நிமிடங்களில் திருச்சி நீதிமன்றம் மற்றும் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து இலுப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள இலுப்பூர் தனியார் பள்ளிக்கு சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு மிரட்டல், தமிழகத்தில் அண்மையில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் இந்த மிரட்டல்களுக்கு பின்னால் உள்ளவர்களை கண்டறிய தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!