படித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் கொத்தனாராக பணியாற்றி வரும் முதியவர் ஒருவர் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு 100 அவசர எணுக்கு ஒரு மர்ம நபர் அழைத்துள்ளார். “திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது” என்று தெரிவித்த அவர் உடனே தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். திடீர் எச்சரிக்கையால் போலீசார் உடனடியாக ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று பரிசோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அந்த அழைப்பு யார் மூலம் வந்தது என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
செல்போன் சிம் மூலம் முகவரி ஆய்வு செய்யப்பட்டதில், அந்த அழைப்பு திருத்தணி கோரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய முனிரத்தினம் என்பவரிடமிருந்து வந்தது தெரியவந்தது. முனிரத்தினம் ஒரு கொத்தனார் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தவர் என்பது தெரியவந்தது. உடனடியாக திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! பள்ளிகளில் இருந்து பதறியடித்து ஓடிய மாணவர்கள்.. பரபரப்பான தலைநகரம்..!
விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. முனிரத்தினம் பிஎஸ்சி மற்றும் பிஎட் பட்டப்படிப்பு முடித்திருந்தார். ஆனால், பல வருடங்களாக வேலைக்காக அலைந்தும் எந்த அரசு அல்லது தனியார் வேலை வாய்ப்பும் கிடைக்காததால், விரக்தியுடன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்த மன உளைச்சலின் காரணமாகவும், மேலும் மது போதையின் தாக்கத்திலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவரும் தன்னை கவனிக்க வேண்டுமென்ற நோக்கில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு பட்டதாரி, வேலை கிடைக்காத நிலையில் கொத்தனாராகச் சிரமப்பட்டு, இறுதியில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டது சமூகத்தில் பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, விரக்தி, போதை – அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய இந்த சம்பவம், தமிழகத்தில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து மீண்டும் சிந்திக்க வைக்கிறது.
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு; அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...!