தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நட்சத்திரமும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த், தனது திரைப்பயணம் மற்றும் அரசியல் பங்களிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 1979இல் ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் 1981இல் ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் நாயகனாக உயர்ந்தார். 1984இல் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தார். அவரது 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ (1991) மாபெரும் வெற்றி பெற்று, ‘கேப்டன்’ என்ற பட்டத்தை அவருக்கு பெற்றுத்தந்தது.

விஜயகாந்த், திரையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனித்துவமான பாதையை வகுத்தார். 2005இல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) நிறுவி, 2011இல் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். அவரது நேர்மையும், மக்களுக்காக அர்ப்பணித்த சேவையும் அவரை மக்கள் தலைவராக உயர்த்தின.
இதையும் படிங்க: நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்திற்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்..!
2023ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று உடல்நலக் குறைவால் காலமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் குரு பூஜையாக அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக, ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ உலக சாதனை விருது வழங்கியது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ 4K தொழில்நுட்பத்தில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டு, திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தின் சகோதரி டாக்டர் விஜயலட்சுமி (78) சென்னையில் (செப்டம்பர் 9) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை அண்ணாநகரில் வசித்து வந்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக (Gynecologist & Pediatric Specialist) பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கியதாக புகழப்பட்டவர். மருத்துவத் துறையில் அவரது சேவைக்காக பல விருதுகளும் பெற்றிருந்தார்.
விஜயகாந்தைப் போலவே சேவை மனப்பான்மை கொண்டவராக அறியப்பட்ட விஜயலட்சுமி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவு தேமுதிக கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னையிலிருந்து மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் (செப்டம்பர் 10) நாளை மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை மதுரை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.

விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, மற்றொரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் விஜயலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜயகாந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அவரது சகோதரியின் மருத்துவ சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த சீமான்..!