வியட்நாமில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானம், சென்னை அருகே நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
வியட்நாம் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்று கொண்டிருந்த விமானம், நேற்று இரவு நடுவானில் சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகவும், பாதுகாப்பாகவும் தரையிறக்கப்பட்டது.
வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகர சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு நேற்று மாலை வியட்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 143 பேர் இருந்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!
விமானம் நடுவானில் சுமார் 36,000 அடி உயரத்தில் இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, சென்னை அருகே வந்த நிலையில், விமானத்தின் ஒரு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு அது செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானிகள், விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். அப்போது சென்னை விமான நிலையம் அருகில் இருப்பதை அறிந்த விமானி, விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.
இதனைத் தொடர்ந்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருமாறு வியட்ஜெட் ஏர்லைன்ஸ் விமானி கேட்டுக்கொண்டார்.
இதன் அடிப்படையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரவு 10.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சரியாக இரவு 10.40 மணிக்கு அந்த விமானம் அவசரமாக சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த விமானிகள் மற்றும் பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பழுதடைந்த விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான நடைமேடை 44-க்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
குறிப்பாக, 143 பேருடன் சுமார் 36,000 அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த வியட்ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, உண்மையில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது தொடர்பான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையம் அருகே விமானம் வந்துகொண்டிருந்ததால், அதில் பயணம் செய்த 143 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!