பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பர் மாளிகை அருகே போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி தோல்வியைத் தழுவிய நிலையில், நேற்று அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் ரிப்பன் மாளிகை முன்பு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். வாகனங்களில் ஏற மறுத்த துப்புரவு பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தர, தரவென இழுத்துச் சென்றனர். அங்கிருந்து 13 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் நீலாங்கரை, வேளச்சேரி, மவுண்ட் ரோடு, கோட்டூர்புரம் போன்ற நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமூக மையங்களுக்கு காவல்துறையால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சமூக நலக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், “மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே வெளியே விடுவோம்” என காவல்துறையினர் மிரட்டல் விடுப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, காவல்துறையினர் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்துள்ளவர்களை இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட அனுமதிக்காமல், பூட்டி வைத்திருப்பதாக போராட்டக்காரர்கள் கதறும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இப்படி ARREST பண்ண குண்டர்களா? நக்சலைட்டுகளா? இன்னும் எட்டு மாசம் தான்…கதை க்ளோஸ்! EPS ஆவேசம்
ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், “13 நாளா நாங்க அமைதியாதானே இருக்கோம். பாத்ரூம் அனுப்புறது என்ன கஷ்டம் உங்களுக்கு. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு தடவை உங்கிட்ட வந்து கெஞ்ச வேண்டியதா இருக்கு. மேடைக்கு மேடைக்கு பெண்களுக்கு சமூகநீதி பத்தி பேசுறாங்க. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு தடவை உங்கள்ட்ட வந்து கெஞ்ச வேண்டியதுதா இருக்கு. ஒரு பாத்ரூம் அனுபவ கூட உங்களுக்கு கஷ்டம்னா என்ன அர்த்தம்? சென்னை மாநகராட்சில குப்பை எடுக்கறதுக்கு மட்டும் நாங்க வேணுமா உங்களுக்கு. இப்படி அடக்கி வச்சா நோய் வராது. எங்களுக்கு ஏற்கனவே குப்பையில் கை வச்சு கண்ட கருமம் பிடித்த நோய் எல்லாம் வந்து. இப்ப இந்த நோய் வேறையா? அநியாயம் பண்றீங்க. இந்த அநியாயத்தை யார் கேட்குறது” என தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! ஆணவ படுகொலை தனிச்சட்டம்... மக்கள் எதிர்பார்ப்பு...