சென்னை அயனாவரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத் தவெக தொண்டர்கள் கொந்தளித்த நிலையில், சென்னை காவல்துறை தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
நேற்று தவெக தலைவர் விஜய் அவர்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது வேட்பாளர் கூட்டத்தில் இச்சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. அயனாவரம் கொன்னூர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது நிகழ்ந்த இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (Lodge), ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகிய இருவர் தங்கியிருந்தனர். இருவரும் அதிகப்படியான மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!
இந்த மோதலின் போது, இருவரும் மாறி மாறி மதுபாட்டில்களைத் தூக்கி வீசி எறிந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மதுபாட்டில் ஜன்னல் வழியாக வெளியேறி, கீழே பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குள் வந்து விழுந்துள்ளது. இது அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், தனிப்பட்ட நபர்களுக்குள் ஏற்பட்ட போதை மோதலால் தவறுதலாக நிகழ்ந்த விபரீதம் என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாட்டில் வீசப்பட்டவுடன் ஆவேசமடைந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, "இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன்" என மேடையிலேயே உறுதிபடத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தவெக தொண்டர்கள் விடுதியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விடுதிக்குள் இருந்த ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் திமுக-வைச் சாடியிருந்த நிலையில், சென்னையில் இத்தகைய ஒரு சம்பவம் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் அரசியல் களத்தில் முன்னிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!