சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைக் கவனிக்கவும் கண்காணிக்கவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள புகழ்பெற்ற கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை முன்னதாக அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை எதிர்த்து கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பிலும், அரசாணையைச் செயல்படுத்தக் கோரி பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர் வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் முழுமையாகக் களையப்படும் வரை கோயிலின் நிர்வாக நடைமுறைகளைக் கவனிக்க இடைக்கால நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வி. பாரதிதாசன், ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட இக்குழுவில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!
அனைத்து பக்தர்களும் பாகுபாடின்றி கனகசபையில் நின்று சாமி தரிசனம் செய்வதையும், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுவதையும் இந்த நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதேவேளையில், கோயிலின் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவது பொது தீட்சிதர்களின் பிரத்யேக உரிமை என்பதால் அதில் நிர்வாகக் குழு தலையிடாது என்றும், கோயிலின் அன்றாட வரவு-செலவு கணக்குகளைப் பொது தீட்சிதர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களது வழிபாட்டு மற்றும் நிர்வாக உரிமைகளில் தலையிடுவதாகக் கூறி, கோயில் பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெ. ஜெயசூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாகக் 'கேவியட்' (Caveat) மனுவைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வந்தே மாதரம் 6 சரணங்களும் கட்டாயமா? மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!












