சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோயிலின் முழு நிர்வாகத்தைக் கண்காணித்துச் சீரமைக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுவை அமைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். அதேவேளையில், தமிழக அரசின் அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முக்கியத் தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள், கடந்த 2014-ஆம் ஆண்டு கோயிலின் நிர்வாகம் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கோயில் நிர்வாகம் முறையாக நடத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. குறிப்பாக, கடந்த 12 ஆண்டுகளாகக் கோயிலுக்கு வந்த வருமானம் குறித்த முறையான முழுக் கணக்குகளைப் பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை; இத்தனை பழமையான திருக்கோயிலைப் பொது தீட்சிதர்கள் அலட்சியமாக நிர்வகித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கோஷ்டி பூசல்..! வார்டு செயலாளருக்கு ஆதவராக திரண்ட மக்கள்... பரபரப்பு.!!

இதனைத் தொடர்ந்து, திருக்கோயில் நிர்வாகத்தை முழுமையாகக் கண்காணித்து நெறிப்படுத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி. பாரதிதாசன் தலைமையில் உயர்மட்ட நிர்வாகக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழுவில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும் செயல்படுவார்கள். மேலும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது தீட்சிதர்கள் கோயிலுக்குள் மேற்கொண்ட தொடர்ச்சியான கட்டுமானங்களால் தொன்மையான புராதனக் கட்டிடங்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற புதிய கட்டிடங்களைத் தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் ஆலோசித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் முழுமையாக மீட்க வேண்டும்; நிலுவையில் உள்ள வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளை வசூலித்து முறையான கணக்குகளைப் பராமரிக்க வேண்டும்; மாயமான மதிப்புமிக்க பொருள்களை மீட்கவும், நிபுணர்களின் ஆலோசனையோடு கோயில் வருமானத்தைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் வழிகாட்டினர். அத்துடன், புராதனத் தன்மை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டு மரபுப்படி குடமுழுக்கு நடத்தவும் அறிவுறுத்தினர்.
இறுதியாக, அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் இந்த நிர்வாகக் குழுவிற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், சாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்யவும், கனகசபையில் நின்று தேவாரம் மற்றும் திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சவுரவ் தாஸ் இந்தியரா? உள்துறை விசாரணை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!