தமிழக அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீனுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்திற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் 2021ம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கி, ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவில் அதனை வழங்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, ஆசிரியர் கி.வீரமணி மற்றும் முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தின விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.
இதையும் படிங்க: இதெல்லாம் நமக்குத் தேவையா? - தினக்கூலிகளை திண்டாடவிட்டு ‘கூலி’ படத்தை கொண்டாடிய முதல்வர்...!
அதனையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணுக்கு டாக்டர் ஏ.பி.கே.அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன், இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ள புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அடுத்ததாக துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது காஞ்சிபுரம் துளிசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது.
சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தைக் கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டதற்காக காவல் மருத்துவர் வி. பிரசண்ண குமார், உதவி கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. கட்டிட வரைபட அனுமதிகளை எளிதாக்கியதற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியான காகர்லா உஷாவுக்கும், பழங்குடியினர் திராவிடர் மற்றும் நலத் திட்டங்களை செயல்படுத்தியதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி பிரியாவிற்கும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணயர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, தமிழ்நாடு திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி ஆகியோருக்கும் முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
அதேபோல் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை வடிவமைத்ததற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களைச் சேர்ந்த டாக்டர் செல்வராஜ் ஐஏஎஸ், கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனா, தமிழ் மொழியின் உலகளாவிய மேம்பாட்டிற்கு பாடுபட்டதற்காக தமிழ் இணையக் கல்வி கழக இயக்குநர் ஆர்.கோமகன் ஆகியோருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: இனி வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!